செஞ்சியில்: மின்னல் தாக்கி தொழிலாளி பலி


செஞ்சியில்: மின்னல் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 Nov 2018 3:45 AM IST (Updated: 20 Nov 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் மின்னல் தாக்கி தொழிலாளி பலியானார்.

செஞ்சி,

செஞ்சி பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கூலி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

செஞ்சி சிறுகடம்பூர் குட்டைக்கரை தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 53), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் தனக்கு சொந்தமான பசுமாட்டை வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்திருந்தார். இதற்கிடையே மாலையில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாமிநாதன் மரத்தில் கட்டியிருந்த பசுமாட்டை அருகில் உள்ள மாட்டுக்கொட்டகையில் கட்டுவதற்காக ஓட்டிச் சென்றார்.

அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story