கர்நாடகத்தில் மதுபானவிடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகள் உள்பட பொதுஇடங்களில் புகைப்பிடிக்க தடை உடனடியாக அமலுக்கு வந்தது


கர்நாடகத்தில் மதுபானவிடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகள் உள்பட பொதுஇடங்களில் புகைப்பிடிக்க தடை உடனடியாக அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 20 Nov 2018 5:39 AM IST (Updated: 20 Nov 2018 5:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மதுபானவிடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகள் உள்பட பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்தது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை மற்றும் நகர மேம்பாட்டு துறை சார்பில் நேற்று பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு நகர மேம்பாட்டு துறை மந்திரி யு.டி.காதர் தலைமைதாங்கினார். கூட்டத்திற்கு பின்னர் மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. புகைப்பிடிப்பதன் மூலம் புகைப்பிடிப்பவர்களுக்கும், அவர் அருகே இருப்பவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை மதுபான விடுதி, உணவகம் மற்றும் கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் வரி இல்லாத கடைகளில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்வது தொடர்பாக மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் புகையிலை பொருட்கள், மதுபானம் மீதான வரி சலுகையை திரும்ப பெற அரசு ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளது.

இந்த புதிய உத்தரவை மீறி மதுபான விடுதி, உணவகம் மற்றும் கேளிக்கை விடுதிகளில் சட்டவிரோதமாக புகைப்பிடிக்க அனுமதி கொடுத்தால் அதன் உரிமங்கள் ரத்து செய்யப்படும். இந்த புதிய நடைமுறையை தீவிரமாக செயல்படுத்த போலீஸ் மற்றும் சட்டத்துறையின் உதவி தேவைப்படுகிறது. இதனால் அந்த துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த 17-ந் தேதி மாநில அரசு சார்பில் மதுபான விடுதி, உணவகம் மற்றும் கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கர்நாடகத்தில் புகைப் பிடிப்பதை தடை செய்வது மற்றும் புகைப்பிடிக்காதவர் களின் நலனை பாதுகாக்கும் சட்டம் 2001-ன் படி அனைத்து மதுபான விடுதி, உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் புகைப்பழக்கம் இல்லாத இடமாக மாற்றுவது கட்டாயமான ஒன்றாக உள்ளது. ‘ேகாட்பா 2003’ சட்டப்படி 30-க்கும் அதிகமான இருக்கைகள் இருக்கும் மதுபான விடுதி, உணவகம் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புகைப்பிடிக்க தனியாக இடம் ஒதுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும் அங்கும் சில விதிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

அதாவது, புகைப்பிடிக்க ஒதுக்கும் இடத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் மற்றும் புகைப்பழக்கம் இல்லாத பொதுமக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். புகைப்பிடிக்க ஒதுக்கும் இடத்தில் உணவுகள், மதுபானம், தண்ணீர், டீ, காபி உள்பட அனைத்து வகையான தின்பண்டங்களையும் விற்கக்கூடாது. புகைப்பிடிக்க ஒதுக்கும் இடத்தில் இருக்கைகள், மேஜைகள், தீப்பெட்டிகள் உள்பட புகைப்பிடிப்பதற்கு தேவையான பொருட்கள் இடம்பெற செய்யக்கூடாது.

அத்துடன், மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளில் புகைப்பிடிப்பவர்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் தீயணைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன் அதன் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story