போடியில்: பால் கேன்களில் ரேஷன் அரிசி கடத்தல் - வியாபாரி சிக்கினார்


போடியில்: பால் கேன்களில் ரேஷன் அரிசி கடத்தல் - வியாபாரி சிக்கினார்
x
தினத்தந்தி 21 Nov 2018 3:00 AM IST (Updated: 20 Nov 2018 11:06 PM IST)
t-max-icont-min-icon

போடியில் பால் கேன்களில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

தேனி,

போடியில் ஒரு மொபட்டில், பால் கேன்களில் மறைத்து வைத்து ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும்படை தாசில்தார் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் போடி திருவள்ளுவர் சிலை அருகில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒரு சாக்கு மூட்டை மற்றும் பால் கேன்களை தொங்கவிட்டபடி வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் கொண்டு வந்த பால் கேன்களில் சோதனை செய்தனர். அப்போது, அதற்குள் ரேஷன் அரிசி இருந்ததை கண்டு பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சாக்கு மூட்டையிலும் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர், போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 30) என்பதும், அவர் பால் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. காலையில் பால் வியாபாரம் செய்து விட்டு, ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும், பிடிபட்ட 110 கிலோ ரேஷன் அரிசியையும் உத்தமபாளையம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.

பால் கேன்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story