கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை


கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Nov 2018 3:30 AM IST (Updated: 21 Nov 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

நோயால் பாதிக்கப்பட்ட சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

நோயால் பாதிக்கப்பட்ட சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் முற்றுகை

அமெரிக்காவில் பயிர்களில் காணப்பட்ட படைப்புழுக்கள் நாளடைவில் ஆப்பிரிக்காவிலும் பரவியது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே நோயால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.நோய் தொற்றுக்கு ஆளான தரமற்ற விதைகளை வழங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோரிக்கை மனு

இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை தலைவர் பரமேசுவரன், விவசாயிகள் சங்கம் கருப்பசாமி, ஒன்றிய தலைவர் ஜெயராமன், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பொன்ராஜ், முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் முருகன், கிளை தலைவர் பசுபதி, இருளப்பன், பொன்னத்துரை, மகாராஜன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள், படைப்புழு நோயால் பாதிக்கப்பட்ட சோள பயிர்களையும் கையில் எடுத்து வந்தனர். அவர்கள் தங்களது முகத்தை துணியால் மூடியவாறு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் கோரிக்கை மனுவை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

Next Story