குழந்தை இல்லாத ஏக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனூர்,
அரியாங்குப்பம் மணவெளி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48), பெயிண்டர். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதற்காக பல டாக்டர்களிடம் சிகிச்சைப்பெற்றும் பலனில்லை.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த பாஸ்கரிடம் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அது பற்றி அடிக்கடி கேட்டனர். இதனால் மனவேதனை அடைந்த அவர், நேற்று காலை வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, பாஸ்கர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதில் அவரது உடல் துண்டானது.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.