பொது மக்களின் சிரமத்தை தவிர்க்க குடிமைப்பொருள் வழங்கல் துறையில் டோக்கன் முறை; கவர்னர் ஆலோசனை
பொது மக்களின் சிரமத்தை தவிர்க்க குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் மக்கள் சேவைக்கு டோக்கன் முறையை அமல்படுத்த கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி தற்போது நாள்தோறும் அரசு அலுவலகங்களில் ஆய்வுகளில் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நேற்று தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பல்வேறு பணிகளுக்காக அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இதனால் அந்த இடத்தில் போதிய வெளிச்சம் மற்றும் காற்று வசதி இல்லாமல் இருந்ததை கண்டார். இதுதொடர்பாக பொதுமக்களும் புகார் தெரிவித்தனர்.
எனவே அந்த அலுவலகத்தை அங்கிருந்து இடமாற்றம் செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக வேறு இடம் பார்க்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து தலைமை செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் சிரமமின்றி பொதுமக்களுக்கு சேவை கிடைக்க டோக்கன் முறையை அமல்படுத்தவும் கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி தரைத்தளத்தில் உள்ள வாகனநிறுத்துமிடத்தை சுத்தம் செய்து அதை டோக்கன் கொடுக்கும் பகுதியாக பயன்படுத்த கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் வல்லவன் மற்றும் கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.