கந்தர்வகோட்டை தொகுதியே புயலால் நாசமாகி கிடக்கிறது எடப்பாடி பழனிசாமி வருகையின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவேசம்


கந்தர்வகோட்டை தொகுதியே புயலால் நாசமாகி கிடக்கிறது எடப்பாடி பழனிசாமி வருகையின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவேசம்
x
தினத்தந்தி 21 Nov 2018 4:30 AM IST (Updated: 21 Nov 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி வருகையின் போது கந்தர்வகோட்டை தொகுதியே புயலால் நாசமாகி கிடக்கிறது என்று அதிகாரிகளிடம் ஆறுமுகம் (அ.தி.மு.க.) எம்.எல்.ஏ. ஆவேசமாக கூறினார். இதுபற்றி முதல் - அமைச்சரிடமும் அவர் புகார் செய்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகர் 10-வது வார்டு பகுதியான மாப்பிள்ளையார்குளத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து கொண்டிருந்தது. முன்னதாக பாதுகாப்பு போலீசார் வாகனங்களில்(எஸ்காட்) வந்தனர்.

அந்த வாகனங்களுக்கு பின்னால் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான நார்த்தாமலை ஆறுமுகம் காரில் வந்து இறங்கினார். அந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் மற்றும் அதிகாரிகள் முதல்-அமைச்சர் வரும் காரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அதிகாரிகளை கண்டதும் ஆத்திரமும், ஆவேசமும் அடைந்த எம்.எல்.ஏ. ஆறுமுகம்,“கந்தர்வகோட்டை தொகுதியே கஜா புயலால் நாசமாகி கிடக்கிறது. எந்த பணியும் அங்கு நடக்கவில்லை. முதல்-அமைச்சர் வருகையை கூட அதிகாரிகள் எனக்கு ஏன்? முறையாக தெரிவிக்கவில்லை. நான் முதல்-அமைச்சர் வந்ததும் நேரில் உங்களை பற்றி சொல்லத்தான் போகிறேன். அதிகாரிகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என உரத்த குரலில் பேசினார்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் கவனமும் அங்கு திரும்பியது. அதேவேளையில் அவரது கேள்விக்கு அதிகாரிகள் பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர். சிறிது நேரத்தில் முதல்-அமைச்சர் அங்கு காரில் வந்து இறங்கியதும் நேரடியாகவே எம்.எல்.ஏ. ஆறுமுகம், அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி புகார் தெரிவித்தார். அதற்கு அவர், “சரி பார்த்து கொள்ளலாம்” என தெரிவித்தார்.

Next Story