ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை; பள்ளி– கல்லூரிகளுக்கு விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயலுக்கு பின்னர் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
காலையிலும் மழை தொடர்ந்து பெய்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது அந்த மரத்தின் கீழ் நிறுத்தி வைத்திருந்த கார் பலத்த சேதம் அடைந்தது. இதேபோல ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் அருகிலும் மரம் முறிந்து விழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்த அறிவிப்பு மற்றும் கனமழை காரணமாக நேற்று ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பாம்பன், ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் அப்துல் கலாம் மணி மண்டபம், ரெயில்வே சுரங்கப்பாதை, மார்க்கெட் தெரு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி, சந்தன மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
பாம்பன்–50, பரமக்குடி–25.2, ராமநாதபுரம்–5.50, திருவாடானை–7.4, தொண்டி–9.2, பள்ளமோர்குளம்–13.5, மண்டபம்–40, ராமேசுவரம்–45.2, தங்கச்சிமடம்–48.3, வட்டாணம்–19, தீர்த்தாண்டதானம்–21, ஆர்.எஸ்.மங்கலம்–14, கடலாடி–7.4, வாலிநோக்கம்–14.6, கமுதி–7, முதுகுளத்தூர்–3.