மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு குண்டாறு பகுதியில் 89 மில்லிமீட்டர் பதிவு


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு குண்டாறு பகுதியில் 89 மில்லிமீட்டர் பதிவு
x
தினத்தந்தி 21 Nov 2018 3:30 AM IST (Updated: 21 Nov 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செங்கோட்டை குண்டாறு பகுதியில் அதிகபட்சமாக 89 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பகுதிகளில் நேற்று அதிகாலையில் பலத்தமழை பெய்தது. இதனால் நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும், மேலப்பாளையம் பகுதியிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலப்பாளையம் மாட்டுச்சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.

இதேபோல் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மதியம் பாபநாசம் அணைப்பகுதியில் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. களக்காடு, திருக்குறுங்குடி பகுதியில் நேற்று பெய்த மழையால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

செங்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த மழையால் அந்த பகுதிகளில் உள்ள ஓடைகளிலும், கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குண்டாறு பகுதியில் 89 மி.மீ. பதிவு

செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதியில் அதிகபட்சமாக 89 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஏற்கனவே அணையின் முழு கொள்ளளவான 36.10 அடி நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் அங்குள்ள கால்வாய், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 128.38 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 98 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 98.75 அடியாகவும் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 73.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 67.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 65.62 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 29.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 22.63 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 41 அடியாகவும் உள்ளது.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், தென்காசி, குற்றாலம், பாபநாசம், கடையம், அம்பை பகுதியிலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. குற்றாலத்தில் பெய்த பலத்த மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

குண்டாறு-89, செங்கோட்டை-77, மணிமுத்தாறு-60, பாபநாசம்-52, சிவகிரி-52, தென்காசி-43, ஆய்குடி-34.5, அம்பை-30, ராதாபுரம்-26, களக்காடு-23, சேர்வலாறு-23, அடவிநயினார் அணை-20, ராமநதி-20, சேரன்மாதேவி-15, பாளையங்கோட்டை-14, கருப்பாநதி-13.5, நெல்லை-8, கடனாநதி-5, சங்கரன்கோவில்-4.

Next Story