புயல் தாக்கிய மாவட்டங்களில்: தொற்றுநோய் பரவாமல் தடுக்க 22 ஆயிரம் லிட்டர் திரவ குளோரின் - கோவை மாநகராட்சி அனுப்பியது


புயல் தாக்கிய மாவட்டங்களில்: தொற்றுநோய் பரவாமல் தடுக்க 22 ஆயிரம் லிட்டர் திரவ குளோரின் - கோவை மாநகராட்சி அனுப்பியது
x
தினத்தந்தி 21 Nov 2018 3:30 AM IST (Updated: 21 Nov 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

புயல் தாக்கிய மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 22 ஆயிரம் லிட்டர் திரவ குளோரின் கோவை மாநகராட்சி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை, 

கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மின்சார வசதி இல்லாமலும், குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தண்ணீர் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக சுகாதார துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் லிட்டர், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 8 ஆயிரம் லிட்டர், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் லிட்டர் என மொத்தம் 22 ஆயிரம் லிட்டர் திரவ குளோரின் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் கூறியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு கோவை மாநகராட்சி சார்பில் திரவ குளோரின் சிறிய கேன்களில் அனுப்பப்பட்டுள்ளன. ஆயிரம் லிட்டர் தண்ணீரில் உள்ள கிருமிகளை கொல்வதற்கு 20 மி.லிட்டர் குளோரின் போதுமானது. கோவையில் இருந்து அனுப்பப்பட்ட திரவ குளோரினை அங்குள்ள கள பணியாளர்கள் சிறிய பாட்டில்கள் மற்றும் கேன்களில் பிடித்து அதை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குளங்கள், கிணறுகள், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் டேங்கர் லாரிகள், மேல்நிலை தொட்டிகள், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள் உள்பட எங்கெல்லாம் மக்கள் தண்ணீர் சேமித்து வைத்துள்ளார்களோ அவற்றில் ஊற்றுவார்கள்.

ஒரு தொட்டியில் எவ்வளவு லிட்டர் தண்ணீர் இருக்கிறது என்பது அங்குள்ள களப்பணியாளர்க ளுக்கு தோராயமாக தெரியும். அதற்கு தகுந்தாற்போன்று அவர்கள் திரவ குளோரினை தண்ணீரில் ஊற்றி தொற்றுநோயை பரவாமல் தடுத்து வருகிறார்கள். இதேபோன்று சுகாதாரத்துறை இயக்குனர் தலைமை யிலான குழுவினர் எங்கு திரவ குளோரின் தேவை என்று கேட்கிறார்களோ அங்கு உடனடியாக லாரிகள் மூலம் கோவையில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.

இது தவிர கோவை மாநகராட்சி சார்பில் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 2,500 குடிநீர் பாட்டில்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story