மாநிலம் முழுவதும் விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற அரசு முடிவு முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
மாநிலம் முழுவதும் பதிவான விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற அரசு முடிவு செய்திருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு,
மாநிலம் முழுவதும் பதிவான விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற அரசு முடிவு செய்திருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூருவில் நேற்று கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்திய பின்பு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க...
விவசாயிகளுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிைறவேற்றுவேன். நான் கொடுத்த வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகள் இல்லை. அதனை நிறைவேற்றியே தீருவேன். சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கப்படும். இதுதொடர்பாக 22-ந் தேதி (அதாவது நாளை) சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
ஆலோசனை கூட்டத்தின் போது விவசாயிகள் தங்களுக்குள்ள 13 பிரச்சினைகள் குறித்து என்னிடம் கூறினார்கள். அந்த 13 பிரச்சினைகளையும் தீர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
வழக்குகளை திரும்ப பெற முடிவு
மாநிலத்தில் வெங்காயத்தின் விலையும் குறைந்து விட்டதாகவும், அதற்கு ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படும். பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (டிசம்பர்) தொடங்க உள்ளது. அந்த கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் பெலகாவியை சேர்ந்த கரும்பு விவசாயிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளேன்.
மாநிலத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. அதனால் மாநிலம் முழுவதும் விவசாயிகள் மீது பதிவான வழக்குகளை திரும்ப பெற அரசு முடிவு எடுத்துள்ளது. அதுபற்றி மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story