தீபத் திருவிழாவையொட்டி, மீட்பு பணியில் ஈடுபட வேலூரில் இருந்து 76 தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலைக்கு பயணம்


தீபத் திருவிழாவையொட்டி, மீட்பு பணியில் ஈடுபட வேலூரில் இருந்து 76 தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலைக்கு பயணம்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:15 AM IST (Updated: 21 Nov 2018 10:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் மீட்பு பணியில் ஈடுபட வேலூரில் இருந்து 76 தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலைக்கு சென்றனர்.

வேலூர்,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபத்திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் இருந்து செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க வடக்கு மண்டல ஐ.ஜி.ஸ்ரீதர் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீவிபத்து, கூட்ட நெரிசல் உள்ளிட்ட சம்பவங்களில் பக்தர்களை பாதுகாக்கவும், மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடவும் உள்ளனர்.

இந்த நிலையில் வேலூரில் இருந்து மாவட்ட அலுவலர் வெங்கடாசலபதி தலைமையில் 76 வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்கள், 2 அவசரகால மீட்பு ஊர்திகளுடன் நேற்று காலை திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

வடமேற்கு மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சத்தியநாராயணன் தலைமையில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 425 தீயணைப்பு வீரர்கள், 22 தீயணைப்பு வாகனங்கள், 6 அவசரகால மீட்பு ஊர்திகளுடன் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர். அனைவரும் 24-ந் தேதி காலை வரை பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story