உயர்கல்வியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேச்சு
உயர்கல்வியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் புங்கனை ஊராட்சிபுதூர்- தாமிலேரிப்பட்டி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.6.87 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் நா.மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி பேசியதாவது:-
இந்த உயர்மட்ட பாலம் கட்டுவதன் மூலம் ஊத்தங்கரை, புங்கனைபுதூர் நொச்சிப்பட்டி, மண்ணாடிப்பட்டி மற்றும் தாமிலேரிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெறுவர். தமிழக அரசு ஏழை மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் தான் மடிக் கணினி, மிதிவண்டி, சீருடை, கல்வி உபகரணங்கள், கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்டவை களை வழங்குகிறது. இந்தியாவிலேயே தமிழகம் உயர் கல்வியில் முன்னிலை வகித்து வருகிறது.
ஏழை, எளிய மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அரசு வழங்குகிறது. எனவே அரசு வழங்கும் திட்டங்களை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்வதோடு தங்களின் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பின்னர் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3 ஆயிரத்து 627 விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கே.லோகேஷ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் எல்.நடராஜன், முன்னாள் பால்வள ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, முன்னாள் மாநில நிலவள வங்கி தலைவர் சாகுல்அமீது, அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், மோட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தேவேந்திரன், வித்யா மந்திர் பள்ளி தாளாளர் வே. சந்திரசேகரன், முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் சிவானந்தம், சந்திரப்பட்டி முன்னாள் தலைவர் நாகராஜ், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சிக்னல் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், வேடியப்பன், தாசில்தார் மாரிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஞானபண்டிதன், குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story