நடுரோட்டில் சண்டை: கொம்புகள் சிக்கியதால் காட்டெருமைகள் தவிப்பு


நடுரோட்டில் சண்டை: கொம்புகள் சிக்கியதால் காட்டெருமைகள் தவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 3:15 AM IST (Updated: 21 Nov 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

நடுரோட்டில் சண்டையிட்டு கொண்ட காட்டெருமைகளின் கொம்புகள் ஒன்றோடொன்று சிக்கியதால் தவிப்புக்கு உள்ளாகின.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கட்டபெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட வெஸ்ட்புரூக் பகுதியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் நேற்று காலை 10.30 மணியளவில் 2 காட்டெருமைகள் சண்டையிட்டு கொண்டன.

நடுரோட்டில் காட்டெருமைகள் சண்டையிடுவதை கண்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கட்டபெட்டு வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் காட்டெருமைகளின் கொம்புகள் ஒன்றோடொன்று சிக்கி கொண்டன. அதில் இருந்து விடுபட முடியாமல் 2 காட்டெருமைகளும் தவித்தன.

இதையடுத்து பட்டாசு வெடித்து காட்டெருமைகளை அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் விரட்டினர். இதற்கிடையில் காட்டெருமைகளின் கொம்புகளை பிரிக்க வனத்துறையினர் கடும் முயற்சி மேற்கொண்டனர். தொடர்ந்து 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 2 காட்டெருமைகளுக்கும் எந்தவித காயமும் இன்றி கொம்புகள் பிரிக்கப்பட்டன. பின்னர் அந்த காட்டெருமைகளை பட்டாசு வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் வெஸ்ட்புரூக்- குன்னூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story