விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காத கூட்டணி அரசை கண்டித்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காத கூட்டணி அரசை கண்டித்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2018 3:30 AM IST (Updated: 21 Nov 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காத கூட்டணி அரசை கண்டித்து எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காத கூட்டணி அரசை கண்டித்து எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர், டிசம்பர் 10-ந் தேதி பெலகாவி சுவர்ணசவுதா முற்றுகையிடப்படும் என எச்சரித்துள்ளார்.

பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

மாநிலத்தில் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை கரும்பு விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க அரசு தவறி விட்டதாகவும், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காத கூட்டணி அரசை கண்டித்தும் பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இதையடுத்து, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கூட்டணி அரசுக்கு எதிராக பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல, பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் கூட்டணி அரசை கண்டித்து பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முதல்-மந்திரி குமாரசாமிக்கு எதிராகவும், கூட்டணி அரசை கண்டித்தும் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

வாக்குறுதிகள் மட்டுமே கொடுக்கிறார்

கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிலுவைத்தொகையை வழங்காமல் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் உள்ளனர். அதுபற்றி கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போது கூட்டணி ஆட்சியிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் குதித்த பின்பே, விவசாயிகளுடனும், சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களுடனும் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்படி இருந்தும் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்று விவசாயிகளிடம் கொடுக்க முடியவில்லை. வெறும் ஆலோசனை மட்டுமே நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தால் கரும்பு விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை.

இந்த அரசு, விவசாயிகளுக்கானது என்று மட்டுமே குமாரசாமி கூறி வருகிறார். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து விவசாயிகளின் எந்த பிரச்சினைகளையும் குமாரசாமி தீர்க்கவில்லை. வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வருகிறார். முதல்-மந்திரியான 24 மணிநேரத்தில் விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். 6 மாதங்கள் ஆகியும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இவ்வாறு விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து குமாரசாமி ஏமாற்றி வருகிறார்.

சுவர்ணசவுதா முற்றுகை

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை ரவுடிகள், கொள்ளையர்கள் என்று குமாரசாமி பேசியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயியையும் தரக்குறைவாக பேசி இருக்கிறார். இதற்காக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் கரும்புக்கு ஆதரவு விலையையும் அரசு நிர்ணயிக்க வேண்டும். டிசம்பர் 10-ந் தேதிக்குள் இவற்றை மாநில அரசு செய்ய வேண்டும். அவ்வாறு அரசு செய்ய தவறினால், டிசம்பர் 10-ந் தேதி அன்று ஒரு லட்சம் விவசாயிகளுடன் பெலகாவி சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு தீவிர போராட்டம் நடத்தப்படும்.

38 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள குமாரசாமி, பின்வாசல் வழியாக முதல்-மந்திரியாகி விட்டார். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அவர், நீண்ட நாள் முதல்-மந்திரி பதவியில் இருக்க முடியாது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story