தனியார் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து சிதறியது ரசாயன கழிவு நீர் சிதறியதால் 130 ஏக்கரில் கரும்பு, நெற்பயிர்கள் நாசம்


தனியார் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து சிதறியது ரசாயன கழிவு நீர் சிதறியதால் 130 ஏக்கரில் கரும்பு, நெற்பயிர்கள் நாசம்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:30 AM IST (Updated: 22 Nov 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

கொப்பா கிராமத்தில் அமைந்துள்ள, தனியார் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து சிதறியது. இதனால் ரசாயன கழிவுநீர் சிதறியதால் 130 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள், நெற்பயிர்கள் நாசமாயின.

மண்டியா, 

கொப்பா கிராமத்தில் அமைந்துள்ள, தனியார் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து சிதறியது. இதனால் ரசாயன கழிவுநீர் சிதறியதால் 130 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள், நெற்பயிர்கள் நாசமாயின.

கொதிகலன் வெடித்து சிதறியது

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கொப்பா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மத்தூரில் கரும்பு விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகளிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுக்கொடுக்குமாறு மாநில அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான தொழிலாளிகள் மத்தூருக்கு சென்றுவிட்டனர். இதனால் நேற்று கொப்பா கிராமத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு குறைந்த அளவிலேயே தொழிலாளிகள் வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று ஆலையில் உள்ள ஒரு கொதிகலன் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கொதிகலன் வெடித்ததில் அதன் பாகங்கள் மற்றும் ரசாயன கழிவு நீர் ஆலையைச் சுற்றி அமைந்துள்ள கரும்பு தோட்டங்கள், விளை நிலங்களில் சிதறிக்கிடந்தன. ஆலையின் காம்பவுண்டு சுவரும் இடிந்து விழுந்தது.

பரபரப்பு, பதற்றம்

இதனால் சுமார் 130 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள், நெற்பயிர்கள் நாசமாகின. மேலும் கொதிகலன் வெடித்ததில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தா என்ற தொழிலாளி படுகாயம் அடைந்தார். தற்போது அவர் மண்டியா மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

நஷ்ட ஈடு கோரி போராட்டம்

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த தொழிலாளர் நலத்துறை அதிகாரி, போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் அவர் கொதிகலன் வெடித்து சிதறிய இடத்தையும், ஆலையையும் சுற்றிப் பார்த்தார். மேலும் கொதிகலன் வெடித்ததால் கரும்பு தோட்டங்கள், விளைநிலங்களில் சிதறிக்கிடந்த ரசாயன கழிவு நீரையும், அதனால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை நிர்வாக அதிகாரி தத், விரைவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட விவசாய சங்கத்தினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இச்சம்பவம் பற்றி கொப்பா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story