மாதவரத்தில் கடையில் திருடிவிட்டு தீ வைத்த கொள்ளையர்கள் விளையாட்டு பொருட்கள் எரிந்து நாசம்


மாதவரத்தில் கடையில் திருடிவிட்டு தீ வைத்த கொள்ளையர்கள் விளையாட்டு பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:15 PM GMT (Updated: 21 Nov 2018 6:44 PM GMT)

மாதவரத்தில், கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை திருடிய கொள்ளையர்கள் கடைக்கு தீ வைத்தனர். இதில் அங்கிருந்த விளையாட்டு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் தபால்பெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஷேக்முகமது (வயது 45). இவர், மாதவரம் தபால்பெட்டி அருகே கே.கே.நகரில் மாதவரம்– மூலக்கடை சாலையில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடையில் தீப்பிடித்து, உள்ளே இருந்து கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், கடையில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஷேக்முகமது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் அதன் அருகில் உள்ள துணி கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டனர்.

இதையடுத்து அந்த கடையின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில், நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் ஷேக்முகமது கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்கின்றனர். சிறிது நேரத்தில் கடைக்குள் இருந்து கரும்புகை வருகிறது.

பின்னர் கடைக்குள் இருந்து வெளியே வரும் மர்மநபர்கள், பக்கத்தில் உள்ள துணி கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் முடியாததால் பாதியில் அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து ஷேக்முகமது கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கல்லாப்பெட்டியில் குறைந்த அளவே பணம் இருந்ததால் ஆத்திரத்தில் கடைக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பிச்சென்று இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story