சென்னை புறநகர் பகுதிகளில் மாணவர்களின் கஞ்சா பழக்கம் தொடர்பாக 2 கல்லூரிகளுக்கு போலீசார் நோட்டீஸ்


சென்னை புறநகர் பகுதிகளில் மாணவர்களின் கஞ்சா பழக்கம் தொடர்பாக 2 கல்லூரிகளுக்கு போலீசார் நோட்டீஸ்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 21 Nov 2018 6:44 PM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா போதைக்கு கல்லூரி மாணவ–மாணவிகள் அடிமையாகி வருவது தொடர்பாக 2 பிரபல கல்லூரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான தனியார் பல்கலைக்கழகங்கள், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் உள்ளன. இந்த மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

வடசென்னை பகுதிகளில் உள்ள மொத்த கஞ்சா வியாபாரிகள் மூலம் சென்னையின் பல பகுதிகளுக்கு கஞ்சா சில்லரை விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. சைதாப்பேட்டை, மெரினா கடற்கரை ரெயில் நிலையங்களில் மொத்த கஞ்சா வியாபாரிகள் சில்லரை வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்கின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்கள் மூலம் சைதாப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம், பொத்தேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம் வரை கஞ்சா விற்பனையாளர்களின் நெட்ஒர்க் தொடர்கிறது. பல்லாவரம் ரேடியல் சாலை, வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலைகளில் மோட்டார் சைக்கிளில் வரும் கஞ்சா வியாபாரிகளும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்துவருகின்றனர்.

கல்லூரிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதை எந்த கல்லூரி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. இந்த வி‌ஷயம் வெளியில் தெரிந்தால் கல்லூரிக்கு கெட்டபெயர் ஏற்படும் என்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய கல்லூரிகளில் கஞ்சா புழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. மாணவிகள் சிலரும் தங்களுக்கு தெரிந்த மாணவர்கள் மூலம் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். பெரும்பாலும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளே கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

படிக்க வேண்டிய காலத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான மாணவர்கள் காலப்போக்கில் கஞ்சா வியாபாரிகளிடம் கமி‌ஷன் பெற்றுக்கொண்டு கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யும் ஏஜெண்டாக மாறி தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

கல்லூரி மாணவ–மாணவிகளின் எதிர்காலத்தை பாழாக்கும் கஞ்சா போதை பயன்பாட்டை முற்றிலுமாக தடுத்துநிறுத்த உரிய நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கை குறித்த செய்தி கடந்த 15–ந்தேதி தினத்தந்தியில் வெளியானது.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவின்பேரில் சென்னை புறநகர் பகுதிகளில் கல்லூரிகள் உள்ள பகுதிகளில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் சேலையூர் போலீஸ் எல்லையில் உள்ள 2 பிரபல கல்லூரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அந்த நோட்டீசில், தங்களது கல்லூரி மற்றும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடையே கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. கல்லூரி மாணவர்கள் கஞ்சா புகைப்பதுடன் அதனை வாங்கி தங்கள் நண்பர்களுக்கு விற்பனை செய்யும் குற்ற செயல்களிலும் ஈடுபடுவதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனவே கல்லூரி நிர்வாகம் இது சம்பந்தமாக விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் காவல் துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கையால் கல்லூரி மற்றும் கல்லூரி விடுதியின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை புறநகர் பகுதிகளில் 2 முக்கிய கல்லூரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் சில கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பப்பட உள்ளது. கல்லூரி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க தவறினால் எங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அந்த கல்லூரிகளுக்கு சென்று சோதனை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story