2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்
2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
தாம்பரம்,
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நகராட்சிகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நிவாரண பொருட்களுடன் சென்ற வாகனங்களை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கொடி அசைத்து அனுப்பிவைத்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நிருபர்களிடம் கூறியதாவது:–
காஞ்சீபுரம் மாவட்ட நகராட்சிகளின் சார்பில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் சார்பாக ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைக்கான முன்னேற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு உள்ளது. 50 மண்டல குழுக்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக அங்கேயே தங்கி பணிகளை செய்து வருகிறார்கள்.
பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் பொக்லைன் எந்திரங்கள், ஜெனரேட்டர்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மாவட்டத்தில் இதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படகுகள் தேவைப்பட்டால் மீன்வளத்துறை மூலமாகவும், தீயணைப்பு துறையில் உள்ள 16 படகுகளும் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.