கஜா புயல் பாதிப்பை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


கஜா புயல் பாதிப்பை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:15 AM IST (Updated: 22 Nov 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து திருத்துறைப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சாலையோரங்களில் வெட்டப்பட்ட மரங்கள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பொக்லின் எந்திரம் மூலமும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்னும் 3 நாட்களில் முக்கிய இடங்களுக்கு மின்சார வினியோகம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

திருத்துறைப்பூண்டியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. மேலும் மருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு அரிசி, குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி- திருத் துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story