புயலில் மேற்கூரையை இழந்த நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் தேர் பாதுகாக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு


புயலில் மேற்கூரையை இழந்த நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் தேர் பாதுகாக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 7:06 PM GMT)

புயலில் மேற்கூரையை இழந்த நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் தேரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நீடாமங்கலம்,

தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர்களில் ஒருவர் பிரதாப சிம்மர். இவர் கி.பி.1761-ம் ஆண்டு நீடாமங்கலத்தில் சந்தானராமர் கோவிலை கட்டினார். மன்னர் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் அருளியதால் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரால் பாடல் பெற்ற இக்கோவிலுக்கு சொந்தமான தேரில் ராமாயண கதை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர் ஓடி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது.

கோவில் முன்பு உள்ள தேர் மண்டபத்தையொட்டி நிறுத்தப்பட்டுள்ள இந்த தேருக்கு தகரத்தால் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெல் நிறுவனம் மூலம் தேருக்கு 4 சக்கரங்கள் புதிதாக பொருத்தப்பட்டன. ஆனாலும் தேரோட்டம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ‘கஜா’ புயல் காற்றில் தேரின் தகர மேற்கூரைகள் பறந்து சென்றன. ஏற்கனவே உரிய முறையில் தேர் பராமரிக்கப்படாத நிலையில் தற்போது மேற்கூரையை புயல் அடித்து சென்று விட்டது. இதன் காரணமாக புராதன சிறப்புமிக்க தேருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது. தேரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் தேருக்கு சக்கரங்கள் புதிதாக பொருத்தப்பட்ட பின்னரும் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புயல் காற்று தேரின் மேற்கூரையையும் அடித்து சென்று விட்டதால், தேருக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தேரில் உள்ள ராமாயண சிற்பங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளன.

புராதன சிறப்பு மிக்க தேரை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தேருக்கு கொட்டகை அமைக்க வேண்டும். அப்போது தான் மழையில் இருந்து தேரை பாதுகாக்க முடியும்.

தேரை புதிதாக வடிவமைக்க நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாக கூறினார்கள். அந்த நிதி எங்கே? என தெரியவில்லை. புதிய தேர் வடிவமைக்கும் பணியும் தொடங்கப்படவில்லை. சேதமடைந்து வரும் தேரையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு அறநிலையத்துறை யினரின் அலட்சிய போக்கே காரணம். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

Next Story