புயல் நிவாரண பணி நடைபெறாததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் பொதுமக்கள் மறியல்


புயல் நிவாரண பணி நடைபெறாததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:00 PM GMT (Updated: 2018-11-22T01:20:23+05:30)

புயல் நிவாரண பணி நடைபெறாததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமம் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் வீட்டின் மீது மரங்கள் விழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், மின்சாரம் வழங்குவதற்கும், வீட்டின் மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் யாரும் வராததை கண்டித்து மேலப்பட்டு பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சணாமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீட்டின் மீது விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் அறந்தாங்கி எழில்நகர் பகுதியில் குடிநீர், மின்சாரம் உடனே வழங்க கோரி பொதுமக்கள் அறந்தாங்கி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில், குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள கலைந்து சென்றனர்.

இதேபோல் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி கிராமத்தில் புயலில் சேதம் அடைந்த பகுதியை அதிகாரிகள் பார்வையிடவில்லை. பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கோரி பொதுமக்கள் சாலையில் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சணாமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

எங்கள் ஊராட்சியில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும், ஒரு ஜெனரேட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜெனரேட்டருக்கு டீசல் வாங்க போதுமான பணம் ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்படவில்லை. இதனால் ஒன்று இரண்டு குடிநீர் தொட்டிக்கு மட்டும் தண்ணீர் ஏற்றிவிட்டு அப்படியே போட்டு விட்டனர். இதனால் தற்போது குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாமல் இருக்கிறோம் என்று கூறினர். அப்போது அதிகாரிகள் அனைத்தும் விரைவில் சரி செய்து கொடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையே பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வரவழைத்தனர். பின்னர் அவர்களுக்கு உணவுகளை வழங்கினர். இதையடுத்து பொதுமக்கள் சாலையோரத்தில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே உள்ளே முத்துடையாம்பட்டியில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தண்ணீர், மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருக்கோகர்ணம் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம்

பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல் மச்சுவாடி, பிருந்தாவனம், உடையாளிப்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் தண்ணீர், மின் இணைப்பு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

கீரனூர் அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட ராக்கதம்பட்டி, தென்னங்குடி ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் நிவாரணம் கேட்டு கீரனூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உடையாளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை தாலுகாவை சேர்ந்த அரியாணிப்பட்டி, மெய்குடிப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் கேட்டு அரியாணிப்பட்டி, மெய்குடிப்பட்டி ஆகிய பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னர், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- புயல் வீசி 6 நாட்கள் ஆகியும் எங்களது கிராமங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்க்கவில்லை. மின்சாரம், குடிநீர் இன்றி நாங்கள் அவதியுற்று வருகிறோம். முறையாக சேத மதிப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். புயல் நிவாரண பணி நடைபெறாததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story