கட்டிவயல் ஊராட்சியில் குப்பையை தூய்மை காவலர்கள் தலையில் சுமக்கும் அவலம்
கட்டிவயல் ஊராட்சியில் குப்பையை தூய்மை காவலர்கள் தலை அவலம் நீடிக்கிறது.
தொண்டி,
திருவாடானை தாலுகா கட்டிவயல் ஊராட்சியில் ஆக்களூர், நயினாவயல், கீழக்குறிச்சி, சிறுநல்லூர், எட்டுகுடி, கட்டிவயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சி கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்க தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி தூய்மை காவலர்கள் தினமும் அனைத்து கிராமங்களிலும் உள்ள குப்பைகளை சேகரித்து கட்டிவயல் கண்மாய் அருகே அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி குப்பை கிடங்குகிற்கு கொண்டு செல்கின்றனர். ஒவ்வொரு கிராமங்களுக்கும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இங்குள்ள குப்பை கிடங்கு உள்ளது.
அதனால் கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சிக்கு இதற்கென வழங்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளில் கொண்டு செல்வது வழக்கம். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குப்பை வண்டிகள் பழுதாகி விட்டன. இதனால் தூய்மை காவலர்கள் தினமும் கட்டிவயல் ஊராட்சி கிராமங்களில் சேகரிக்கும் குப்பைகளை ஒரு குப்பை தொட்டியில் வைத்து பல மைல் தூரம் தலைச்சுமையாக தூக்கிச்சென்று குப்பை கிடங்கில் கொட்டி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மிகவும் குறைவான கூலிக்கு வேலை செய்யும் தூய்மை காவலர்கள் மிகுந்த சிரமங்களுடன் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் பழுதடைந்துள்ள குப்பை வண்டிகளை சரிசெய்து தரவேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குப்பை வண்டிகள் பழுதான நிலையில் துருப்பிடித்து கொண்டிருக்கிறது. மேலும் தூய்மை காவலர்கள் தினமும் குப்பைகளை தலையில் சுமந்து செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. இதேபோல இந்த ஊராட்சியில் உள்ள 100–க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் பெரும்பாலும் கிராமங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. எனவே கட்டிவயல் ஊராட்சியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து தரவேண்டும் என முன்னாள் ஊராட்சி துணை தலைவர் முத்துராமலிங்கம் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.