‘கஜா’ புயலால் 1,530 தென்னை மரங்களை இழந்த பெண் விவசாயி


‘கஜா’ புயலால் 1,530 தென்னை மரங்களை இழந்த பெண் விவசாயி
x
தினத்தந்தி 21 Nov 2018 11:00 PM GMT (Updated: 21 Nov 2018 7:59 PM GMT)

கந்தர்வகோட்டை பகுதியில் கஜா புயலால் 1,530 தென்னை மரங்களை பெண் விவசாயி இழந்துள்ளார். ஒரே நாளில் வாழ்வாதாரமே பறி போய் விட்டதாக அவர் கண்ணீர் மல்க கூறினார்.

புதுக்கோட்டை,

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சுமார் 625 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகளும், 50 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்களும்,சுமார் 375 ஏக்கர் நெற்பயிரும், 150 ஏக்கர் மக்காச்சோளமும், 150 ஏக்கர் துவரையும் சேதம் அடைந்து இருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்து உள்ளது.

கந்தர்வகோட்டையை சேர்ந்த சங்கீதா தென்னரசு என்ற விவசாயியின் தென்னந்தோப்பில் மட்டும் 1,530 தென்னை மரங்கள் கஜா புயலால் வேரோடு சாய்ந்து விழுந்து இருப்பது தெரியவந்து உள்ளது. இதுபற்றி சங்கீதா தென்னரசு கண்ணீர் மல்க கூறியதாவது:-

வீரம்பட்டி என்ற இடத்தில் 32 ஏக்கர் பரப்பளவில் 2 ஆயிரத்து 100 தென்னங்கன்றுகளை பொள்ளாச்சி பகுதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வந்து நட்டு வைத்தோம். உயர்ரகத்தை சேர்ந்த இந்த தென்னங்கன்றுகளுக்கு முறையாக உரமிட்டு ஐந்தாண்டுகளாக பராமரித்து வந்தோம். நன்றாக வளர்ந்த அந்த தென்னை மரங்கள் தற்போது தான் காய்ப்புக்கு வந்தன. ஒவ்வொரு மரத்திலும் சுமார் 300 இளநீர்கள் காய்த்து தொங்கி கொண்டிருந்தன. இந்த நேரத்தில் தான் கஜா புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 1,530 மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இன்னும் ஒரு வாரம் ஆகி இருந்தால் இந்த இளநீர்களை வெட்டி விற்பனை செய்து இருப்போம். 5 ஆண்டுகளாக நாங்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பராமரித்த தென்னை மரங்கள் ஒரே நாளில் தரையோடு சாய்ந்து விட்டன. நாங்கள் செலவு செய்த தொகை அனைத்தும் ஒரே நாள் அடித்த புயல் காற்றில் சரிந்து விட்டன. இதனால் எங்கள் வாழ்வாதாரமே பறி போய்விட்டது. இந்த தென்னை மரங்களை உருவாக்க வேண்டுமானால் இன்னும் ஐந்தாண்டுகள் ஆகும். நாங்கள் பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்களின் முதல் பாளையில் குலை தள்ளிய இளநீரை கூட நாங்கள் பறிக்க முடியால் போய்விட்டதே என்பதை நினைக்கும்போது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதுகுளத்தை சேர்ந்த வாழை விவசாயி ராமய்யா கூறியதாவது:-

9 மாதங்களுக்கு முன் 2 ஏக்கரில் 1,500 வாழைகளை சாகுபடி செய்தேன். தார் போட்ட நிலையில் அனைத்து வாழைகளும் சரிந்து விழுந்து விட்டன. வாழைக்காக நான் செலவு செய்தது அனைத்தும் ஒரே நாளில் வீணாக போய்விட்டது. இந்த பாதிப்பில் இருந்து எப்படி மீளப்போகிறேன் என்றே தெரியவில்லை. அரசு அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்து எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story