சபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்: கேரள பஸ்களை சிறைபிடித்து பா.ஜனதாவினர் போராட்டம்


சபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்: கேரள பஸ்களை சிறைபிடித்து பா.ஜனதாவினர் போராட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:30 AM IST (Updated: 22 Nov 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலைக்கு காரில் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து கேரள பஸ்களை சிறைபிடித்து குமரியில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இந்த திடீர் பதற்றத்தை தொடர்ந்து இருமாநில எல்லையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தக்கலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் சபரிமலை உள்பட பல இடங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதனை தவிர்க்க சபரிமலையில் போலீசார் கெடுபிடி அதிகரித்துள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது, நிலக்கலில் வைத்து போலீஸ் அதிகாரி யதிஷ் சந்திரா அவரை தடுத்து நிறுத்தி அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து குமரி மாவட்ட இந்து இயக்கங்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சார்பில் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தக்கலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்து அமைப்பினர், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பரவியது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன் திரண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த நாகர்கோவில்-திருவனந்தபுரம், திருவனந்தபுரம்-நாகர்கோவில் சென்ற 4 கேரள அரசு பஸ்களை போராட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கி விட்டனர். அந்த பயணிகளை தமிழக அரசு பஸ் மூலம் செல்லவேண்டிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறைபிடிக்கப்பட்ட கேரள பஸ்களை விடுவிக்குமாறு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது, சபரிமலைக்கு சென்றுள்ள மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டம் திரும்பும் வரை கேரள பஸ்களை இங்கு இயக்கக்கூடாது. அதை தவிர்த்து இயக்கினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரள பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக்காரர்கள் கூறினார்கள்.

நிலைமை விபரீதமாவதை அறிந்ததும் நாகர்கோவில் துணை சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையிலான போலீசார் கூடுதலாக அங்கு குவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், நாகர்கோவில் வடசேரியில் நின்ற கேரள பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டது. இடைப்பட்ட பகுதிகளில் இயங்கிய கேரள பஸ்களை தக்கலை பகுதிக்கு வழியாக இயக்காமல் மாற்று பாதையில் இயக்கப்பட்டது. பின்னர், போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட 4 கேரள அரசு பஸ்களும் விடுவிக்க போராட்டக்காரர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சிறைபிடித்த பஸ்களை விடுவித்து அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகி தர்மராஜ் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உருவபொம்மையை எரித்த பிறகு அவர்கள் ஒப்பாரி வைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற 3 கேரள பஸ்களை களியக்காவிளையில் வைத்து இந்து அமைப்பினர், பா.ஜ.க.வினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சிறைபிடித்தனர். பின்னர், பஸ்கள் மீது திடீரென செருப்புகளை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள அரசு போக்குவரத்து கழகம் கேரள எல்லை பகுதியான இஞ்சிவிளையுடன் பஸ் போக்குவரத்தை நிறுத்தியது. பதற்றம் உருவானதை தொடர்ந்து, இருமாநில எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story