ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் 10 டன் இரும்பு பொருட்கள் திருட்டு 6 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் 10 டன் இரும்பு பொருட்கள் திருட்டு 6 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2018 3:45 AM IST (Updated: 22 Nov 2018 10:16 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் 10 டன் இரும்பு பொருட்கள் திருட்டு போனது. இது தொடர்பாக காவலாளி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் லிப்ட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் சிலர் லிப்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் 10 டன் இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து தொழிற்சாலையின் மேலாளர் சஞ்சீவிகுமார், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், இரும்பு பொருட்களை திருடியது தொழிற்சாலையில் வேலை செய்யும் கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 25), பூண்டி பகுதியை சேர்ந்த சோபன்பாபு (25), சிதம்பரம் பகுதியை சேர்ந்த காமராஜ் (24), தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்யும் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சீனிவாசன் (53) என தெரியவந்தது.

சீனிவாசன் உதவியுடன் தொழிற்சாலையில் போலி பில் பதிவு செய்து ரூ.25 லட்சம் இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது.

மேலும் காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த பூபாலன் (26), மதுராந்தகம் பகுதியை சேர்ந்த கிளர்ட் (52) ஆகியோர் திருட்டுக்கு உதவியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story