கார்த்திகை தீபத்திருவிழா 9-ம் நாள்: புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது


கார்த்திகை தீபத்திருவிழா 9-ம் நாள்: புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 22 Nov 2018 10:19 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று மதியம் புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதி உலா வந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தீபத்திருவிழாவின் 8-வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர்-உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் குதிரை வாகனங்களிலும் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் 9-ம் நாளான நேற்று மதியம் 12 மணி அளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

சாமி வீதி உலா தொடங்கும் வரை மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்தபடியும், குடையைபிடித்த படியும் சாமி தரிசனம் செய்தனர். சாமி வீதி உலா தொடங்கியதும் மழை நின்றுவிட்டது.

மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன் பின்னால் புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர்-உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்தனர்.

மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று அதிகாலை 5 மணி அளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜையும், கோ பூஜையும் செய்யப்பட்டது.

பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் 3,500 லிட்டர் நெய், காடா துணிகள் மாட வீதியை சுற்றி கொண்டு வரப்பட்டு மலைக்கு எடுத்து செல்லப்பட்டன.

தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் கோவிலில் பரணி ஏற்றப்படுகிறது.

மகா தீபத்தை முன்னிட்டு நேற்று கோவிலில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவிலில் சாமி சன்னதியில் அண்ணாச்சி பழம், சோளம் போன்றவை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 2 சக்கர நாற்காலி கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று மதியம் 12.45 மணி அளவில் பவுர்ணமி தொடங்கியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பகலில் குறைந்த அளவிலான பக்தர்களே கிரிவலம் சென்றனர். இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மகா தீபத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் திருவண்ணாமலை நகரில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story