டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி வாலிபர் பலி உடல் 7 கி.மீ. தூரம் இழுத்துவரப்பட்ட அவலம்


டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி வாலிபர் பலி உடல் 7 கி.மீ. தூரம் இழுத்துவரப்பட்ட அவலம்
x
தினத்தந்தி 23 Nov 2018 4:15 AM IST (Updated: 22 Nov 2018 10:54 PM IST)
t-max-icont-min-icon

டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் 7 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.

அரக்கோணம், 

மதுரையில் இருந்து காட்பாடி, அரக்கோணம், சென்னை வழியாக டேராடூன் செல்லும் டேராடூன் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. நேற்று காலை வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே ரெயில் கடந்து சென்ற போது ரெயில் என்ஜினில் சிக்கி ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இறந்தவரின் உடல் ரெயில் என்ஜினின் முகப்பு பகுதியில் சிக்கி உள்ளது. என்ஜின் டிரைவருக்கு உடல் சிக்கியது தெரியாததால் ரெயில் சோளிங்கர் தாண்டி சென்றபோது, அருகில் இருந்த ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் ரெயில் என்ஜினில் ஒருவரின் உடல் சிக்கி உள்ளது என்று என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

உடனே டிரைவர் ரெயிலை சித்தேரி ரெயில் நிலையம் அருகே நிறுத்திவிட்டு என்ஜின் பகுதிக்கு சென்று பார்த்தபோது, ஒருவர் என்ஜினுக்கு முன்பாக நின்று கொண்டிருப்பது போல் சிக்கி பலத்த காயங்களுடன் இறந்து உடல் தொங்கிக்கொண்டு இருந்தது. சுமார் 7 கிலோ மீட்டர் வரை ரெயில் என்ஜினில் உடல் இழுத்து வரப்பட்டது தெரியவந்தது. டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சித்தேரி ரெயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர், ரெயில்வே அதிகாரிகள் சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவர் 35 வயதிற்குட்பட்டவர். மஞ்சள் நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா?, ரெயில் பாதையை கடக்கும் போது இறந்தாரா? அல்லது தண்டவாளத்தில் ஏற்கனவே இறந்து கிடந்தவரை ரெயில் என்ஜின் இழுத்து வந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறந்தவரின் உடல் மீட்கப்பட்ட பின்னர் டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் சிறிது நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சித்தேரி அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டு, 50 நிமிடங்களுக்கு மேல் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

மேலும் இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story