வேப்பனப்பள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்திய கார் மின்கம்பத்தில் மோதி விபத்து மூட்டைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
வேப்பனப்பள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்திய கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பக்கமுள்ள கோனேகவுண்டனுர் கிராமம் அருகே நேற்று அதிகாலை கார் ஒன்று வேகமாக வந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த டிரைவர் அதை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். கார் மோதியதில் 2 மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன.
இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு வந்து காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
காரில் சுமார் 1 டன் ரேஷன்அரிசி கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கார் மற்றும் 1 டன்அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய டிரைவர் மற்றும் கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்துவதற்கு வசதியாக காரின் உட்புறம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு அரிசி மூட்டைகள் எடுத்து செல்வதற்கு வசதியாக அடிப்பாகங்கள் சரி செய்யப்பட்டு இருந்தது. இதை பார்வையிட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story