முன்னாள் பேராசிரியை பாத்திமா பாபு உருவபொம்மை எரிப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்


முன்னாள் பேராசிரியை பாத்திமா பாபு உருவபொம்மை எரிப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்
x
தினத்தந்தி 23 Nov 2018 3:30 AM IST (Updated: 22 Nov 2018 11:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் முன்னாள் பேராசிரியை பாத்திமா பாபுவின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் முன்னாள் பேராசிரியை பாத்திமா பாபுவின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

உருவபொம்மை எரிப்பு

தூத்துக்குடி பெரியகடை தெருவை சேர்ந்தவர் பாத்திமா பாபு, முன்னாள் பேராசிரியை. இவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது அவரது வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் கவுன்சிலர் கோல்டன் தலைமையில் சிலர் நேற்று முன்தினம் மாலை அவருடைய வீட்டின் முன்பு திரண்டு கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு முன்பு வக்கீல் ரசூல் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அவருடைய உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் போராட்டம்

அப்போது அவர்கள் கூறும்போது, “ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய பாத்திமா பாபு போன்றவர்கள், கலவரம் நடக்கும்போது கலெக்டர் அலுவலகம் செல்லாமல், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து கொண்டனர். தற்போது அவரை பற்றிய வீடியோ வெளியானதன் மூலம் அவர் ஒரு போலி போராளி என்பது தெரியவந்தது. அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அவர் பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றனர்.

இதேபோல் தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மக்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்கள் கூறும்போது, ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணமாக இருந்த பாத்திமா பாபு உள்ளிட்டோரை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றனர்.

Next Story