கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு நிலவுவதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு நிலவுவதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரன்ஜித்சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்காச்சோளத்தில்...
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள மக்காச்சோளம் பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் பல பகுதிகளில் பயிர்கள் முழுமையாக சேதமடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் மக்காச்சோளம் பயிருடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன், மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பூச்சியியல் துறை பேராசிரியை கீதா விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது விவசாயிகள் அனைத்து முறைகளையும் கடைபிடித்தும் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினர். அப்போது மாவட்ட கலெக்டர் குறுக்கிட்டு பேசுகையில், படைப்புழு தாக்குதல் இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. மக்காச்சோளம் பயிரிடப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு உள்ளது. இதற்கு நிவாரணம் பெற விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். படைப்புழு தாக்குதலால் ஏற்பட்டு உள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு இழப்பீடு பெற அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்றார்.
முற்றுகை
விவசாயிகள் சிலர் திடீரென தங்கள் கழுத்தில் தூக்கு கயிறு போல துணி கட்டிகொண்டு கலெக்டர் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், படைப்புழு தாக்குதல் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
உரம் தட்டுப்பாடு
டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் கிடைப்பது இல்லை. அங்கு உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதற்கு, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
போலி கருப்பட்டி
உடன்குடி பகுதி விவசாயிகள் பேசுகையில், எங்கள் பகுதியில் சீனியில் தயாரிக்கப்படும் போலி கருப்பட்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பனை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த கருப்பட்டி விற்பனையை தடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் முறையாக வழங்கப்படுவது இல்லை. 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை எனறு விவசாயிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
Related Tags :
Next Story