கஜா புயலால் உருக்குலைந்த கிராமங்கள் மீண்டு வருவது எப்போது? மின்சாரம், குடிநீரின்றி 7-வது நாளாக மக்கள் தவிப்பு


கஜா புயலால் உருக்குலைந்த கிராமங்கள் மீண்டு வருவது எப்போது? மின்சாரம், குடிநீரின்றி 7-வது நாளாக மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 11:00 PM GMT (Updated: 22 Nov 2018 7:07 PM GMT)

கஜா புயலால் உருக்குலைந்த புதுக்கோட்டை மாவட்ட கிராமங்கள் மீண்டு வருவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக மின்சாரம், குடிநீரின்றி மக்கள் தவித்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை,

கஜா புயல் கடந்த 16-ந் தேதி அதிகாலை தாக்கியது. இந்த புயலுக்கு நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. கஜா புயலின் கோர தாண்டவத்தால் புதுக்கோட்டை டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சரிந்து விழுந்தன. ஏராளமான வீடுகள், கடைகள் சேதம் அடைந்தன. அடிப்படை வசதிகள் கிடைக்காததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

குறிப்பாக கிராமப்புறங்களில் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்து மின்சாரம் இல்லாததாலும், குடிநீர் சரிவர கிடைக்காததாலும் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். இதனால் ஆத்திரம் அடையும் கிராம மக்கள் அவ்வப்போது ஒரு சில இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் சார்பில் மெழுகுவர்த்தி, பாய், தலையணை, போர்வை போன்ற ஏராளமான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதிகம் பாதிப்புக்குள்ளான சில பகுதிகளுக்கு தன்னார்வலர்கள் வாகனங்களில் சென்று உணவு வழங்கி வருகிறார்கள்.

தண்ணீர் லாரி மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்துக்கு 4 குடங்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் காலி குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடித்து செல்கிறார்கள். கஜா புயல் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை பள்ளிகள் தொடங்கின. ஆனால் பள்ளி வளாகங்களில் மரங்கள் விழுந்து கிடந்ததாலும், பள்ளிகளின் மேற்கூரை ஓடுகள் உடைந்து கிடந்ததாலும் மாணவர்களை அமர வைக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

ஆலங்குடி ரோட்டில் உள்ள கோவிலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் உடைந்து கிடந்ததால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து ஊழியர்கள் பள்ளி வகுப்பறைக்குள் உடைந்து கிடந்த ஓடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அந்த பள்ளி வகுப்பறையில் வைக்கப்பட்டு இருந்த மாணவ-மாணவிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மழையில் நனைந்து இருந்தன. ஈரமான நோட்டு புத்தகங்களை ஆசிரியைகள் வகுப்பறையில் அடுக்கி காய வைத்தனர்.

பள்ளி வளாகத்துக்குள் சாய்ந்து விழுந்து கிடந்த மரங்களையும், சாலையோரங்களில் சாய்ந்து கிடந்த மரங்களையும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெட்டி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை. ஆனால் கிராமங்களில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்து மின்வயர்கள் அறுந்து தொங்கி கொண்டும், தரையிலும் கிடந்தன. இதனால் கிராமங்களில் மின்வினியோகம் முற்றிலுமாக தடைபட்டு, செல்போன்களுக்கு சார்ஜ் போட முடியாமலும், மின்மோட்டார்களை இயக்க முடியாமலும் உள்ளதால், சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை மீண்டும் சீரமைத்து மின்சாரம் எப்போது கிடைக்கும் என கிராம மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

இதுபற்றி ஆலங்குடியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “கஜா புயலால் எங்கள் பகுதி முழுவதுமாக உருக்குலைந்து மின்சாரமே இல்லாமல் ஆகிவிட்டது. சிறிது, சிறிதாக சீரமைப்பு பணிகள் தொடங்கி புதுக்கோட்டை டவுன் மற்றும் சில பகுதிகளில் மின்சாரம் வினியோகிக்கப்பட்டாலும், ஆலங்குடியில் வெட்டன்விடுதி, பொன்னன்விடுதி, மேட்டுப்பட்டி, திருவரங்குளம், கோவிலூர், கச்சிரான்பட்டி, வேப்பங்குடி உள்பட பல பகுதிகளில் 7-வது நாளாக மின்சாரம் இல்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகிறோம். அனைத்து சாலைகளிலும் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இரவு நேரத்தில் மக்கள் தூக்கமின்றி உள்ளனர். மக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story