தமிழர்களின் வாழ்வியலை பறைசாற்றும் 350 ஆண்டு பழமை வாய்ந்த வீர கம்பங்கள் ஆய்வு
தமிழர்களின் வாழ்வியலை பறைசாற்றும் 350 ஆண்டு பழமை வாய்ந்த வீர கம்பங்கள் கோவை அருகே உள்ளன. இவற்றை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவை,
முல்லை நில மக்களின் வாழ்வியல் முறைகளை பறைசாற்றும் வீர கம்பங்களை பற்றி வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள கரும்புரவிபாளையம், ஆவலப்பம்பட்டி, பொள்ளாச்சி அருகே உள்ள அடிவெள்ளி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சலவநாயக்கன்பட்டி, ஆமந்தக்கடவு, மெட்ராத்தி, கோட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:-
கரும்புரவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக் கப்பட்ட வீர கம்பங்கள் அனைத்தும் அடுக்கு சிற்பங்கள் வகையை சேர்ந்தவையாகும். ஒரு அடுக்கு முதல் 12 அடுக்கு வரை அவை காணப்படுகின்றன. 20 செ.மீ முதல் 60 செ.மீ வரை அகலமும், 30 செ.மீ முதல் 285 செ.மீ வரை உயரமும் உடையவையாகும்.
இதில் முதல் அடுக்கில் வீரன் போர்புரியும் காட்சியும், இறந்த வீரர்களை அழைத்துச் செல்லுகின்ற தேவ மாதர்கள் இரண்டாவது அடுக்கிலும், மூன்றாவது அடுக்கில் தேவலோகக் காட்சியில் வீரன் எதற்காகப் போர் புரிகின்றான் என்ற விவரமும் இடம்பெற்றுள்ளன. கால்நடைகளுக்காக உயிர் நீத்த கம்பங்களும் உள்ளன. வீரனின் அருகில் கால்நடைகளும், மிருகங்களுடன் சண்டை செய்யும் காட்சிகளும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. n
சிவன், திருமால், நந்தி போன்ற பலவகையான தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. அவற்றை வீரர்கள் வணங்குகின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் செதுக்கப்பட்டு உள்ளது. சில கம்பங்களில் லிங்கத்தின் முன் ஒருவர் அமர்ந்து பூசை செய்யும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. அடுத்த அடுக்கில் பல்லக்கில் ஒருவர் அமர்ந்திருக்க இருவர் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு செல்கின்ற காட்சி வரிசையாகச் செதுக்கப்பட்டு உள்ளன.
அடுத்த அடுக்கில் பண்டைய தமிழர் வாழ்வியலை விளக்கும் வகையில் தயிர் கடைவது போன்றும், வீரன் புல்லாங்குழல் வாசிப்பது போன்றும் அதை வீர மகளிரும் அவர்களுடைய கால்நடைகளும் கேட்டு ரசிப்பது போன்றும் செதுக்கப்பட்டு உள்ளன. அடுத்த அடுக்கில் வீரர்கள் குதிரை மற்றும் யானை மேல் அமர்ந்து செல்லும் சிற்பங்கள் உள்ளன.
வீரர்களின் புகழ் சந்திரனும், சூரியனும் இருக்கும் வரை நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்திரன் - சூரியன் முத்திரைகள் மேல் அடுக்கில் காட்டப்பட்டு உள்ளன. பெரியமோளகாரப்பட்டியில் உள்ள கம்பத்தில் கல்வெட்டு செய்தி உள்ளது. இது 1719-ம் ஆண்டை சேர்ந்ததாகும். மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உள்ள உறவை இன்று வரை பறைசாற்றி வரும் வீரக்கம்பங்கள் சில இடங்களில் கல் தூண்களாகவும் சில இடங்களில் மரத்தூண்களாகவும் உள்ளன. இவை 300 முதல் 350 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story