திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி வழிபாடு சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது


திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி வழிபாடு சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது
x
தினத்தந்தி 23 Nov 2018 3:30 AM IST (Updated: 23 Nov 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. சொக்கப்பனைகளும் கொளுத்தப்பட்டது.

திருச்செங்கோடு,

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் வளாகத்தில் கிழக்கு பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட செங்குத்தான சிகரத்தின் உச்சியில் விநாயகர் கோவிலும், பாண்டீசுவரர் கோவிலும் உள்ளது. மிக குறுகிய இடமே உள்ள அந்த கோவில் வளாகத்தில் சிவனடியார்கள் சார்பில் கடந்த 16 ஆண்டுகளாக பெரிய கொப்பரை விளக்கில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கார்த்திகை மகாதீபவிழா கமிட்டி சார்பில் 17-வது ஆண்டு மகாதீபம் ஏற்றும் விழா நேற்று மாலை தொடங்கியது. இதற்காக விழா கமிட்டியினரும், பக்தர்களும் 600 கிலோ நெய், 6 மூட்டை பருத்தி துணி, 10 கிலோ கற்பூரம், பெரிய செம்பு கொப்பரை ஆகியவற்றை தலையில் சுமந்து சறுக்கு பாறைகள் வழியாக மேலே கொண்டு சேர்த்தனர்.

மாலை 5 மணிக்கு பாண்டீசுவரர் கோவிலில் சிறப்பு யாகம், வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கார்த்திகை தீப விழாக்குழு நிறுவனர் மயில் முருகேஷ், குழு செயலாளர் திருநாவுக்கரசு, தலைவர் குமரவேல், பொருளாளர் மனோகரன் மற்றும் சிவனடியர்கள் திரண்டு நின்று சிவபுராணம், திருவாசகம், திருமறை பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடியபடி கார்த்திகை மகாதீபத்தை ஏற்றி வைத்தனர். இந்த தீபம் திருச்செங்கோடு நகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு பிரகாசமாக தெரிந்ததுது. அதனை பக்தர்கள் தங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தரிசித்தனர்.

தொடர்ந்து அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அர்த்தனாரீஸ்வரர் சாமி, ஆதிகேசவ பெருமாள் சாமி பல்லக்கில் கோவில் வெளிப்பிரகாரம் வந்து ராஜகோபுர வாயில் முன்பு தரிசனம் தந்தனர். அங்கு பெரிய அகல் விளக்கில் கார்த்திகை தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து சாமிகள் வெளிப்பிரகார பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் ஊர்வலம் வந்து கோவிலில் மேற்கு பகுதியில் பிரமாண்டமான சொக்கப்பனையை பார்வையிட்டார். அங்கு வழிபாடுகள் நடந்தது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

அடுத்து கிழக்கு பகுதியில் உள்ள பெருமாள் சொக்கப்பனையும் வழிபாடுகளுடன் கொளுத்தப்பட்டது. இந்த சொக்கப்பனைகள் சுமார் 50 அடி உயரத்துக்கு கொளுந்துவிட்டு எரிந்தது. மலைமீது சொக்கப்பனை எரிவதை நகரில் இருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை 5 மணி முதல் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலையை பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினார்கள். சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கிரிவலப்பாதையில் திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்களும், பள்ளிபாளையம், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து கிரிவலம் வந்து சாமி கும்பிட்டனர்.

கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி, கிரிவலம் வரும் நிகழ்ச்சிகளையொட்டி பக்தர்களுக்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story