நெல்லை மாவட்டத்தில் 48 பள்ளிக்கூடங்களுக்கு தூய்மைக்கான விருது கலெக்டர் ஷில்பா வழங்கினார்
நெல்லை மாவட்டத்தில் 48 பள்ளிக்கூடங்களுக்கு தூய்மைக்கான விருதுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் 48 பள்ளிக்கூடங்களுக்கு தூய்மைக்கான விருதுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
தூய்மைக்கான விருது
நெல்லை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிக்கூடங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்து சிறப்பாக செயல்பட்ட 48 பள்ளிக்கூடங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. சுகாதாரத்தின் முக்கிய அங்கங்களாக சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், சோப்புடன் கூடிய கைகழுவும் வசதி, இயக்குதல் மற்றும் பராமரித்தலும், நடத்தை மாற்றம், திறன் உயர்த்துதல் ஆகிய தலைப்புகளில் பள்ளிகளில் ஆய்வு செய்து மதிப்பீடுகள் செய்யப்பட்டன. இதில் நெல்லை மாவட்டத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டில் தூய்மை பள்ளிக்கான விருதுக்கு 48 பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
கலெக்டர் வழங்கினார்
இந்த பள்ளிக்கூடங்களுக்கு கலெக்டர் ஷில்பா நேற்று விருது, பரிசு தொகை மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். இதில் முதல் மற்றும் 2-வது இடத்தை பிடித்த பள்ளிகளுக்கு மாநில அளவிலான விருதுகளும், மாவட்ட அளவில் பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 6 பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும், துணை பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 40 பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதமும் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, சேரன்மாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயராஜ், வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலர் சின்னத்துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நாராயணன், உதவி திட்ட அலுவலர்கள் தனசிங், சேதுசொக்கலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபர்சன் சுகிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story