தொழிலாளி கொலை வழக்கு: பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளி கொலை வழக்கு: பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Nov 2018 4:00 AM IST (Updated: 23 Nov 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி கொலை வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம், 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மூங்கில்பாடி சேனைக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 25), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன்(29) என்பவர் வழிமறித்து மது குடிப்பதற்கு பணம் கேட்டார். குணசேகரன் பணம் இல்லை என்று கூறினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று மாலை மகேந்திரன் தரப்பிற்கும், குணசேகரன் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மகேந்திரனும், அவருடைய சித்தி சுமதி(43) ஆகியோர் சேர்ந்து குணசேகரனை கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன், சுமதி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 3-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது, குணசேகரனை கொலை செய்த குற்றத்திற்காக மகேந்திரன், சுமதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Next Story