7 நாட்களாக இருளில் தவிப்பு: துவரங்குறிச்சியில் மின்சாரம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்


7 நாட்களாக இருளில் தவிப்பு: துவரங்குறிச்சியில் மின்சாரம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Nov 2018 4:15 AM IST (Updated: 23 Nov 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சியில் 7 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்ட பொதுமக்கள் மின்சாரம் வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

கஜா புயலால் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 88 ஊராட்சிகள், துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சி, 27 வார்டுகளை கொண்ட மணப்பாறை நகராட்சி என அனைத்து பகுதிகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. குடிசை, ஓட்டு வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. இதனால் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராமங்களும், பொன்னம்பட்டி பேரூராட்சி, மணப்பாறை நகராட்சி பகுதிகளும் அலங்கோலமாக காட்சி அளித்தன. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

வீடுகள் மீது விழுந்த மரக்கிளைகளை, வீட்டை சேர்ந்தவர்களே அப்பகுதியை சேர்ந்தவர்கள் உதவியுடன் வெட்டி அப்புறப்படுத்தி, வீடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடித்த நிலையில் தொட்டியில் தண்ணீரை ஏற்றுவதற்கு மின்சாரம் இல்லை, இதனால் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்ற நிலை ஏற்பட்டதால் அவதிப்பட்ட மக்கள் போராட்டங்களை நடத்தினர். பின்னர் ஒவ்வொரு பகுதிக்கும் மின்வினியோகம் வழங்கப்பட்டதுடன், ஓரளவு குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டது.

ஆனால் கஜா புயல் பாதித்து இன்றுடன் ஒருவாரம் ஆகிவிட்ட நிலையிலும், பல்வேறு கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் இருளில் தவிக்கின்றனர். குக்கிராமங்களில் இன்னும் மின்கம்பங்கள் கூட மாற்றப்படவில்லை. அனைத்து இடங்களிலும் மின் இணைப்புகளை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு, ஒவ்வாரு பகுதிக்கும் தொடர்ந்து மின் இணைப்பு வழங்கி வருகின்றனர். மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள திடீர் நகர் பகுதியில் கடந்த 7 நாட்களாக மின்சாரம் வினியோகம் இல்லை. இதனால் இருளில் தவித்த அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று திடீர் நகர் பகுதிக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மருங்காபுரி தாசில்தார் கருணாகரன் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மின் இணைப்புகளை சரிசெய்யும் பணி தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மணப்பாறை சுற்று வட்டார பகுதியில் கால்நடைகளை வைத்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்த பலரும், கால்நடைகளுக்கு தீவனம் இன்றி, தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் இருந்த பயிர்கள் நாசமானதாலும், தேக்கு, வேம்பு, புளியமரம், மாமரம் என பல்வேறு மரங்கள் சாய்ந்து விட்டதாலும் விவசாயிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது. பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் சேத கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் அரசு சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படும் பகுதிகளில், நிவாரண நிதியை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story