புயல் சேத பகுதிகளை பார்வையிட சென்றபோது கதறியழுத பெண்ணின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய கவர்னர்


புயல் சேத பகுதிகளை பார்வையிட சென்றபோது கதறியழுத பெண்ணின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய கவர்னர்
x
தினத்தந்தி 22 Nov 2018 11:15 PM GMT (Updated: 22 Nov 2018 8:32 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட சென்ற கவர்னரிடம் பெண்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காதது குறித்து கதறி அழுதனர். அப்போது கதறியழுத ஒரு பெண்ணின் கண்ணீரை, கவர்னர் துடைத்து ஆறுதல் கூறினார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ செய்தது.

திருவாரூர்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். முதலில் திருவாரூர் பயணியர் மாளிகையில் இருந்து புறப்பட்டு மன்னார்குடி வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து காசாங்குளம் என்ற இடத்தில் சேதம் அடைந்து கிடந்த உயர்கோபுர மின்கம்பத்தை சரிசெய்யும் பணி நடந்து கொண்டு இருப்பதை பார்வையிட்டார். அப்போது அங்கு சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகளிடம், சீரமைப்பு பணி எப்போது முடிவடையும். இதுபோன்று எத்தனை மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன?. என்று கேட்டார். சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் சேரி என்ற இடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார். அப்போது தமிழ்ச்செல்வி என்ற பெண், புயலால் நாங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்து விட்டோம். எங்களது வாழ்வாதாரமே நாசமாக போய் விட்டது என்று கூறினார். தொடர்ந்து கோட்டூர் சன்னதி தெருவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அருள்ஜோதி என்ற பெண், நாங்கள் அனைவரும் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருகிறோம் என்று கண்ணீர் விட்டு கதறினார்.

அந்த பெண்ணின் கதறலை கனிவுடன் கேட்ட கவர்னர், அந்த பெண்ணின் கண்களில் வழிந்த கண்ணீரை தனது கைகளால் துடைத்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அங்கிருந்தவர்களிடம், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், உங்களை சந்திப்பதற்காகவும் நான் வந்துள்ளேன். உங்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடிசைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள உங்களுக்கு குடிசைகள் சேதம் அடைந்ததற்கு ரூ.10 ஆயிரமும், முகாம்களில் தங்கியிருப்பதற்கு ரூ.5 ஆயிரமும், பாத்திரங்கள் வாங்குவதற்கு ரூ.3500-ம் என ரூ.18500 உடனடியாக வழங்கப்படும் என்று கூறினார்.

அப்போது அங்கிருந்த பெண்கள் பலர், இந்த பகுதிகளில் நிவாரண பணிகளே நடைபெறவில்லை. அதிகாரிகள் வந்து சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிடவில்லை. சேதம் அடைந்த குடிசை வீடுகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை என தெரிவித்தனர். அதனை கேட்ட கவர்னர், அருகில் இருந்த கலெக்டரிடம், புயல் பாதித்து ஒரு வாரம் ஆகியும் ஏன் இன்னும் கணக்கெடுப்பு பணி நடத்தவில்லை என்று கேட்டார். அதற்கு கலெக்டர், சேதம் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருவதாக தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேசிய கவர்னர், இன்னும் இரண்டு நாட்களில் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். ஒரு வாரத்தில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கவர்னருடன், அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜூ, கலெக்டர் நிர்மல்ராஜ் ஆகியோரும் உடன் சென்றனர்.

Next Story