குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மறியல் சாலையில் மதுபாட்டில்களை வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மறியல் சாலையில் மதுபாட்டில்களை வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 23 Nov 2018 4:15 AM IST (Updated: 23 Nov 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

வடுவூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்ணாரப்பேட்டையில் சாலையில் மதுபாட்டில்களை வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள செருமங்கலம் கிராமத்தில் கஜா புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் நிரப்ப முடியவில்லை. அங்கு குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று செருமங்கலம், உடையார் தெரு, அப்பரசம்பேட்டை, காஞ்சிகுடிக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு செருமங்கலத்தில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலைகளின் குறுக்கே புயலில் விழுந்த மரக்கிளைகள் போடப்பட்டிருந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள், அங்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-தஞ்சை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மன்னார்குடி அருகே உள்ள கண்ணாரப்பேட்டை பொதுமக்கள் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு திருமக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கள்ளத்தனமாக மது விற்றவர்களிடம் இருந்து பறித்து வந்து மதுபாட்டில்களை சாலையில் வைத்தும், சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கக்கோரியும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடை செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல துளசேந்திரபுரம் பகுதி பொதுமக்கள் குடிநீர் அடிப்படை வசதிகள் கேட்டு மதுக்கூர் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமக்கோட்டை மற்றும் மதுக்கூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல மன்னார்குடி தெற்குவீதி பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு தெற்கு வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்சாரம் வழங்கக் கோரி பூவனூர்,சம்பாவெளி கிராம மக்கள் நேற்று காலை நீடாமங்கலம் மன்னார்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் விசு.அண்ணாதுரை தலைமை தாங்கினார். சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மின்சாரம் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story