ஓடும் ரெயிலில் துணிகரம் பயணியிடம் ரூ.40 லட்சம் வைரம் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
ஓடும் ரெயிலில் பயணியிடம் ரூ.40 லட்சம் வைரங்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
ஓடும் ரெயிலில் பயணியிடம் ரூ.40 லட்சம் வைரங்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ரூ.40 லட்சம் வைரம் திருட்டு
மும்பை சர்னிரோடு பகுதியில் தேஜஸ் மேத்தா என்பவர் வைர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் வைரகற்கள் அனுப்பி வைக்கும்படி கூறியிருந்தார். அதன்பேரில் தேஜஸ் மேத்தா தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலேஷ்(வயது49) என்பவரிடம் ரூ.40 லட்சம் மதிப்புள்ள வைரங்களை கொடுத்து அனுப்பினார். அவர் சர்னிரோட்டில் இருந்து பாந்திரா நோக்கி மின்சார ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.
அந்த ரெயில் தாதர் வந்தபோது, வைரங்களை வைத்திருந்த பை திறந்து கிடந்தது. அதில், இருந்த வைரங்கள் மாயமாகி இருந்தன. இதை பார்த்து நிலேஷ் அதிர்ச்சியில் உறைந்தார். செய்வதறியாது பதறினார்.
போலீஸ் விசாரணை
பின்னர் இதுபற்றி தேஜஸ் மேத்தாவுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மின்சார ரெயிலில் பயணம் செய்த யாரோ ஒருவர் தான் வைரங்களை திருடிச்சென்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
ரெயிலில் கண்காணிப்பு கேமரா இல்லை என்பதால் திருட்டு ஆசாமி யார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இருப்பினும் சம்பவத்தின் போது, சர்னிரோடு- தாதர் இடையே நிலேஷ் பயணம் செய்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரிப்பதற்காக ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story