தொடர் மழை எதிரொலி: தாழ்வான பகுதியில் வீடுகளில் மழை நீர் புகுந்தது


தொடர் மழை எதிரொலி: தாழ்வான பகுதியில் வீடுகளில் மழை நீர் புகுந்தது
x
தினத்தந்தி 23 Nov 2018 5:45 AM IST (Updated: 23 Nov 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி நேற்று நீடித்த தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். கடல்சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

புதுச்சேரி,

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்றும் நீடித்தது. நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலையில் கனமழை பெய்தது. நேற்று காலை 8-30 மணி நிலவரப்படி (24 மணிநேரம்) 6 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.

இந்த மழை காரணமாக நகரப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமியான்பேட்டை, பாவாணர் நகர் உள்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

மழைவெள்ளம் புகுந்த பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்தனர். ராட்சத மோட்டார்கள் கொண்டு தண்ணீர் இறைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டன.

இதனால் மழைவிட்ட சிறிது நேரத்திலேயே தண்ணீர் வடிந்தது. குறிப்பாக பாவாணர்நகர், நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகில் உள்ள வாய்க்கால் போன்ற இடங்களில் ராட்சத மோட்டார்மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் இந்திராகாந்தி சிலை பகுதியில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டது.

நேற்று பகல் நேரம் முழுவதும் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு இருந்ததால் சூரியனின் முகத்தையே பார்க்க முடியவில்லை. ஆனாலும் பகல் வேளையில் மழை பெய்யவில்லை.

பின்னர் இரவு 9 மணி அளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசியது. புதுவையில் நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது படகுகள் கரையில் ஓய்வெடுத்தன.

புதுவை தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல்பரப்பின் பெரும்பகுதியை அலைகள் ஆக்கிரமித்திருந்தன. சிறிய அளவில் தெரிந்த மணல் பரப்பில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடல் அலையின் சீற்றத்தை ரசித்து பார்த்தனர்.

Next Story