வேலூர் கன்சால்பேட்டையில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தடுப்புச்சுவர் கலெக்டர் உத்தரவு


வேலூர் கன்சால்பேட்டையில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தடுப்புச்சுவர் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 23 Nov 2018 11:00 PM GMT (Updated: 23 Nov 2018 4:41 PM GMT)

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க கால்வாய் ஓரம் உயரமான தடுப்புச்சுவர் கட்ட கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

வேலூர்,

தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி மழை பெய்யத்தொடங்கியது. நேற்றும் மழை நீடித்தது.

தொடர் மழை காரணமாக வேலூர் மாநகராட்சி சூரியகுளம் பர்மாகாலனி, கன்சால்பேட்டை, கஸ்பா போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் கழிவுநீரும் மழைநீருடன் கலந்து அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது. தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள். வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வாளி மூலம் வெளியேற்றினர். நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது.

இந்த நிலையில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்த பகுதிகளான பர்மா காலனி, கன்சால்பேட்டை, வசந்தம் நகர், கஸ்பா ஆகிய பகுதிகளில் கலெக்டர் ராமன் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் குப்பைகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு சிறிய பாலங்களில் அடைப்பு ஏற்படும் இடங்கள் குறித்து கேட்டறிந்து, அதுபோன்ற பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து அடைப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கன்சால்பேட்டை பகுதியில் ரெயில்வே கேட் அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகாமல் இருக்க அங்குள்ள கால்வாய் ஓரம் உயரமான தடுப்புச்சுவர் கட்டவும், மழைநீர் கல்வாய்களை உடனுக்குடன் தூர்வாரி மழைநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் மெகராஜ், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், சுகாதார அலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story