மழைக்காலத்தில் போக்குவரத்து துண்டிக்காமல் தடுக்க: கூடலூர்-கேரள சாலையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்


மழைக்காலத்தில் போக்குவரத்து துண்டிக்காமல் தடுக்க: கூடலூர்-கேரள சாலையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 Nov 2018 3:30 AM IST (Updated: 24 Nov 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தில் போக்குவரத்து துண்டிக்காமல் தடுக்க கூடலூர்-கேரள சாலையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர்,


கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு, கோட்டயம் பகுதிகளுக்கு சாலை செல்கிறது. ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, கூடலூர்- கேரள சாலை துண்டிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக-கேரள எல்லையான கீழ்நாடுகாணியில் மண் சரிவால் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதனால் 1 வாரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கேரளாவுக்கு இயக்கப்படும் சரக்கு லாரிகள் கூடலூரில் பல நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையிலான அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். பின்னர் சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக தொடங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால், சீரமைப்பு பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு சாலையின் ஒருவழியாக வாகனங்கள் இயக்கப்பட்டது. அதன்பின்னர் ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கி, சீரமைப்பு பணி தொடங்கியது. முதற்கட்டமாக சாலையோரத்தில் ராட்சத தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, மழைக்காலத்தில் கூடலூர்-கேரள சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படாமல் தடுக்க சாலையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவு பெறும் என்றனர்.

Next Story