கலெக்டரின் தடை உத்தரவு எதிரொலி; சீனாபுரம் மாட்டுச்சந்தை வெறிச்சோடியது


கலெக்டரின் தடை உத்தரவு எதிரொலி; சீனாபுரம் மாட்டுச்சந்தை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 23 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 6:54 PM GMT)

கால்நடை சந்தை நடத்த மாவட்ட கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டதன் எதிரொலியாக சீனாபுரம் மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

பெருந்துறை,

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக பல மாடுகள் இறந்து உள்ளன. இதைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று கோமாரி நோய் தாக்கப்பட்டு உள்ள கால்நடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோமாரி நோய் ஒரு கால்நடையில் இருந்து மற்றொரு கால்நடைக்கு பரவும் தன்மை கொண்டது. எனவே கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்ட கால்நடைகளை தனியாக பிரித்து வைத்து அதற்குண்டான சிகிச்சை அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி சந்தையில் விற்பனைக்காக கொண்டுவரப்படும் மாடுகள் மூலம் கோமாரி நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் மாடுகளால் கோமாரி நோய் தாக்க வாய்ப்பு உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளை தொடர்ந்து 2 வாரங்கள் நடத்த தடை விதித்து கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் மாட்டுச்சந்தை நேற்று நடைபெறவில்லை. விவசாயிகள் யாரும் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வரவில்லை. இதன்காரணமாக சீனாபுரம் மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் சீனாபுரம் சந்தைக்கு விற்பனைக்காக மாடுகள் எதுவும் கொண்டு வராமல் இருக்க அந்த பகுதியை சேர்ந்த கால்நடை டாக்டர் வித்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்குள்ள நுழைவு வாயிலில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story