கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நாமகிரிப்பேட்டை,
ராசிபுரம் வணிகர்கள் சங்கம், ரோட்டரி சங்கங்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு புயல் நிவாரண நிதி மற்றும் பால் பவுடர், ரொட்டி, மருந்து பொருட்கள், தலையணை, பெட்சீட், துண்டு, வேட்டி, சேலைகள், பிஸ்கட், குடிநீர், உணவு பொருட்களை வணிக நிறுவனங்களிடம் இருந்து பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேகரித்தனர். இந்த பொருட்கள் ரோட்டரி சங்க உதவியுடன் தனி வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணியில் ரோட்டரி சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமையில் வணிகர்கள் சங்கத் தலைவர் பாலாஜி, ரோட்டரி சங்க உதவி ஆளுனர் பிரகாஷ், முன்னாள் ரோட்டரி தலைவர்கள் ராமசாமி, சிட்டி வரதராஜன், குணசேகரன், ராயல் ரோட்டரி தலைவர் அசோக்குமார், செயலாளர் ரவிக்குமார், முன்னாள் தலைவர் ராஜூ, கல்வி நகர் ரோட்டரி செயலாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குமார பாளையம் அட்சயம் அறக்கட்டளை சார்பில் அரிசி, பருப்பு, குடிநீர் பாட்டில், சேலை-வேட்டி உள்ளிட்ட சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான உணவு உள்ளிட்ட பொருட்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி குமாரபாளையத்தில் நடைபெற்றது. தாசில்தார் ரகுநாதன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் லாரியை கொடி அசைத்து வழியனுப்பினார். இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் முருகன் அட்சயம் அறக்கட்டளையின் தலைவர் நவீன், ஒருங்கிணைப்பாளர் ரவீனா ரவிச்சந்திரன் பாலாஜி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிவாரண பொருட்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குமாரபாளையம் தாலுகா நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட அறந்தாங்கி பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தாசில்தார் தெரிவித்தார்.
நாமகிரிப்பேட்டை சிறகுகள் அறக்கட்டளை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள், நிர்வாகிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களான வேட்டி, சேலை, உணவு பொருட்கள், துணிமணிகள் சேகரித்தனர். இந்த நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிவாரண பொருட்களை வேன் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.90 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கல்லூரி மாணவர்கள் தினேஷ்குமார், சீனிவாசன், குணா, பாலசுப்பிரமணியம், கவுதம் மற்றும் சிறகுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் நேரில் வழங்கினர்.
Related Tags :
Next Story