காதல் திருமணம் செய்த கர்ப்பிணி திடீர் சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை
கோவையில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி திடீரென்று இறந்தார். இது குறித்து கோவை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை புலியகுளம் ரெட்பீல்டு பகுதியில் உள்ள நாராயணசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சையது புகாரி (வயது 25), தள்ளுவண்டியில் வைத்து அழகு செடிகளை விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அதேபகுதியை சேர்ந்த ஆல்வின் மோனிகா (22) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
8 மாத கர்ப்பிணியான தனது மனைவியை பிரசவத்துக்காக அவருடைய தாயார் சகாயராணி வீட்டிற்கு சையது புகாரி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஆல்வின் மோனிகாவுக்கு முதுகுவலி ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அதற்கு அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு சிகிச்சைக்கு வருகிறோம் என்று கூறி உள்ளனர். வீட்டிற்கு சென்றதும் ஆல்வின் மோனிகாவுக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டு உள்ளது.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சகாயராணி, தனது மகளை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆல்வின் மோனிகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆல்வின் மோனிகாவுக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண்டே ஆவதால் அவருடைய சாவு குறித்து கோவை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story