விடுதி மாணவிகள் ஆர்ப்பாட்டம் எதிரொலி கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஊழியர் கைது


விடுதி மாணவிகள் ஆர்ப்பாட்டம் எதிரொலி கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஊழியர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2018 5:15 AM IST (Updated: 24 Nov 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள கல்லூரியில் வடமாநில மாணவியிடம் ஆபாசமாக பேசிய துப்புரவு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

வண்டலூர்,

சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொறியியல் உள்பட பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் உள்ள விடுதிக்கு செல்வதற்காக லிப்டில் சென்றபோது அங்கு பணிபுரியும் துப்புரவு ஊழியர் அர்ஜூனன் (வயது 28) என்பவரும் லிப்டில் இருந்தார்.

அப்போது அர்ஜூனன் அந்த மாணவியை பார்த்து ஆபாசமாக பேசி, சைகை காட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மானபங்கப்படுத்தும் நோக்கத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதனால் பயந்துபோன அந்த மாணவி கூச்சல்போட்டார். உடனே லிப்டை நிறுத்திய அந்த மாணவி வெளியே வந்து நடந்த சம்பவத்தை சக மாணவ-மாணவிகளிடம் கூறினார்.

இந்த தகவல் விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் காட்டுத்தீ போல் பரவியது. உடனே விடுதி முன்பு குவிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அந்த துப்புரவு ஊழியரை பணிநீக்கம் செய்யக்கோரி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன், மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியிடம் ஆபாசமாக பேசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசில் கல்லூரி விடுதி பெண் வார்டன் சங்கரி (48), துப்புரவு ஊழியர் அர்ஜூனன் மீது புகார் கொடுத்தார். போலீசார் சிங்கபெருமாள்கோவிலை அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story