நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது


நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 23 Nov 2018 9:30 PM GMT (Updated: 23 Nov 2018 7:22 PM GMT)

நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் துப்பு துலங்கினார்கள்.

கோவை,

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மனைவி சரோஜினி (வயது 70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சரோஜினி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சரோஜினியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது.

அத்துடன் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் ஹெல்மெட் அணிந்து இருப்பதும், பின்னால் வந்தவர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் அவருடைய முகம் தெளிவாக தெரிந்தது. அத்துடன் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணும் தெளிவாக இருந்தது. உடனே போலீசார் அதை வைத்து விசாரணை செய்தனர்.

அதில், அவர்கள் 2 பேரும் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த லாரன்ஸ் (30), ஜெகதீஸ்வரன் (32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு பெண்களிடம் நகையை பறித்ததும், அங்கு போலீசில் சிக்கிவிடாமல் இருக்க கோவைக்கு வந்ததும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story