உலக சிக்கன நாள் விழா: பள்ளி பருவ சேமிப்பு வருங்காலத்தில் துணை நிற்கும் - மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சு


உலக சிக்கன நாள் விழா: பள்ளி பருவ சேமிப்பு வருங்காலத்தில் துணை நிற்கும் - மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 24 Nov 2018 3:00 AM IST (Updated: 24 Nov 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி பருவ சேமிப்பு வருங்காலத்தில் துணை நிற்கும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் பேசினார்.

ஊட்டி,


ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 23-ந் தேதி உலக சிக்கன நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட சிறு சேமிப்புத்துறை சார்பில் உலக சிக்கன நாள் விழா ஊட்டி எச்.ஏ.டி.பி. அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசரூதின் முன்னிலை வகித்தார். உலக சிக்கன நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருவாய் அதிகாரி செல்வராஜ் பேசியதாவது:-

உலக சிக்கன நாள் என்பது அனைத்துக்கும் உட்பட்டது. நாம் நமது பணத்தை சேமித்து வைப்பது மட்டுமல்லாமல் உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள்களையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் நமக்கும், நாட்டுக்கும் பயன் ஏற்படும். எங்கு பார்த்தாலும் தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகளில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

தேனீக்கள் பூக்களில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக தேனை சேகரித்து, தன்னுடைய இடத்தில் சேமித்து வைக்கிறது. எறும்புகள் வெயில் காலத்தில் தங்களுக்கு தேவையான உணவுகளை சேமித்து வைத்து, மழைக்காலத்தில் அதன் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது.

தேனீக்கள், எறும்புகள் மட்டுமல்ல, தற்போது பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி தான் சேமித்த 1,105 ரூபாயை கஜா புயல் நிவாரணத்துக்காக வழங்கி உள்ளாள்.

எனவே சேமிப்பு பழக்கத்தை மாணவர்கள் பள்ளி பருவத்தில் இருந்தே கடைப்பிடித்தால் வருங்காலத்தில் சேமிப்பு மிகவும் உறுதுணையாக நிற்கும். பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சேமிப்பு குறித்து எடுத்துக் கூறி வீண் செலவுகளை தவிர்த்து நாட்டிற்கும், வீட்டுக்கும், நாமும் முன்னேறும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-2018-ம் நிதியாண்டில் ரூ.279 கோடி சிறு சேமிப்பு மூலம் வசூலாகியுள்ளது. நடப்பு 2018-2019-ம் நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை ரூ.202 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் ராஜூ (சிறு சேமிப்பு), ஊட்டி தலைமை தபால் அதிகாரி உமா மகேஸ்வரி, துணை கண்காணிப்பாளர் பானுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story