வேதாரண்யம், பட்டுக்கோட்டை அருகே: கல்லூரி மாணவி உள்பட 5 பெண்கள் பலி - நிவாரண பொருட்கள் வாங்க சென்றபோது நேர்ந்த துயரம்


வேதாரண்யம், பட்டுக்கோட்டை அருகே: கல்லூரி மாணவி உள்பட 5 பெண்கள் பலி - நிவாரண பொருட்கள் வாங்க சென்றபோது நேர்ந்த துயரம்
x
தினத்தந்தி 24 Nov 2018 4:30 AM IST (Updated: 24 Nov 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம், பட்டுக்கோட்டை அருகே நிவாரண பொருட்கள் வாங்க சென்ற கல்லூரி மாணவி உள்பட 5 பெண்கள் பலியானார்கள். மேலும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வேதாரண்யம், 


நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உருக்குலைய செய்து விட்டது. இதனால் இங்கு உணவு, மின்சாரம், குடிநீர் இன்றி கிராம மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் பகல், இரவு நேரங்களில் சாலையோரங்களில் காத்திருந்து நிவாரண பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு, குடிநீர் ஆகியவற்றை வாங்கி சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் அகர நீர்மூளை கிராமத்தை சேர்ந்த நடராஜன் மனைவி அமுதா(வயது 50), அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் மனைவி சுமதி(35), செல்வராசு மனைவி ராஜகுமாரி(40), ராமமூர்த்தி மனைவி சரோஜா(35). இவருடைய மகன் மணிகண்டன்(15) ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் இரவு நீர்மூளை அரசு மருத்துவமனை முன்பு நாகை-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் வாகனங்களில் கொண்டும் செல்லும் நிவாரண பொருட்களை வாங்குவதற்காக நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது ஏர்வாடியில் இருந்து நாகூர் நோக்கி சென்ற ஒரு கார், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த 5 பேர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அமுதா, சுமதி, ராஜகுமாரி, சரோஜா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மணிகண்டன் படுகாயம் அடைந்தான்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கும், படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பாவாஜிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42). இவருடைய மனைவி ராணி(40). இவர்களுடைய மகள் அனுசுயா(19). இவர் அருகே உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வீசிய கஜா புயலில் சிக்கி கண்ணனின் வீடு உள்பட அந்த பகுதியில் உள்ள ஏராளமானோரின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது.

ஆனால் இந்த பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதுவரையில் நிவாரண பொருட்களை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு பல தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் போர்வை, பாய், கொசுவர்த்தி மற்றும் உணவு பொருட்களை வேன்களில் கொண்டு வந்து வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மதியம் தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பாவாஜிக்கோட்டைக்கு வந்தது. உடனே சேதம் அடைந்த தனது வீட்டில் இருந்து அனுசுயா நிவாரண பொருட்களை வாங்க வெளியே சென்றார். ரோட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது அருகே உள்ள ஒரு வீட்டில் மழையில் நனைந்திருந்த சுவர் திடீரென இடிந்து நடந்து சென்று கொண்டு இருந்த அனுசுயா மீது விழுந்தது.

இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுசுயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புயல் நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக சென்றபோது கல்லூரி மாணவி உள்பட 5 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதிகளில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story